வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பில் 5 பேரிடம் சாட்சியங்கள் பதிவு

வட்டுக்கோட்டை இளைஞர் மரணம் தொடர்பில் குறித்த இளைஞரின் சகோதரர், தந்தை, அவருடன் கைதான இளைஞர் உள்ளிட்ட ஐந்து பேர்  நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.

 

சாட்சி பதிவுகளையடுத்து வழக்கை எதிர்வரும் முதலாம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுத்து, மற்றுமொரு சந்தேகநபரையும் கைது செய்யுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சித்தங்கேணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.

 

யாழ்ப்பணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

தாக்குதல்களுக்கு உள்ளானமையினால் அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

 

இந்தநிலையில், குறித்த இளைஞனுடன் கைதான மற்றொரு இளைஞரின் சாட்சியத்தின் அடிப்படையில் வட்டுக்கோட்டை காவல்நிலையத்தின் 4 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்