
நம்மட படைப்புகள் கண்காட்சி – 2023
-கிண்ணியா நிருபர்-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மூதூர் ஜே.எம்.ஐ நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச கண்காட்சி கடந்த ஒக்ட்டோபர் 25ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூதூர் ஆசிரியர் வாண்மை விருத்தி மையத்தில் நடைபெற்றது.
ஐந்து நாள் கொண்ட இந்த இலவசக் கண்காட்சியில் மூதூர் மண் சார்ந்து வெளிவந்த நூல்கள், சஞ்சிகைகள், கையேடுகள், குறுந்திரைப்படங்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்ற வெளியீடுகளோடு மூதூர் சார்ந்த தொன்மையான பழங்கால பொருட்கள் மற்றும் Youtube கலைஞர்களின் நேர்காணல் என்று பல்வேறு இலக்கிய மற்றும் பண்பாட்டியல் சார்ந்த அம்சங்களை காணக்கூடியதாக இருந்தது.
மேற்படி கண்காட்சியில் முதன்மை அழைப்பாளர்களாக மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.முனவ்வறா நளீம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கிழக்கு மாகாண கலாசாரப் பண்பாட்டு அலுவல்கள் பணிப்பாளர் திரு சி.நவனீதன், மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மூதூர் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திரு மோகன குமார், 3CD நிறுவன தலைவர் வைத்தியர் ஜனாப் கே.எம்.ஷாஹிர், சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், லயன்ஸ் கழக ஒருங்கிணைப்பாளர்களான திரு. கதிர் திருச்செல்வம், ஜனாப் இல்யாஸ் முபாரிஸ் ஆகியோரோடு ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் எம்.மாஹிர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் மாலை நேர அரங்குகளில் உறவுகள் சொல்லும் உணர்வுகள் (சிறுகதை தொகுப்பு), தேடோடி (கட்டுரைத் தொகுப்பு) என்ற இரு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டதோடு இரு புதுமுக இளம் தயாரிப்பாளர்களினால் கிழவன், மதி என்ற குறும்படங்களும் வெளியீடு செய்யப்பட்டன. அத்தோடு மூதூரில் Ceylon Voice Media சார்பாக Youtube நிறுவன Silver Button Unboxing நிகழ்வும் இடம்பெற்றது.
குறிப்பாக மூதூர் சார்ந்த குறும்பட கலைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவமும், மூதூர் பிரதேச சபை நகர சுத்திகரிப்பு ஓய்வுநிலை பணியாளர்களுக்கான கெளரவிப்பு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.
நம்மட படைப்புகள் கண்காட்சி மூதூர் மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைப்பதோடு அவர்களின் படைப்புகளை மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் மூதூர் ஜே.எம்.ஐ தனியார் நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தபோதும், இந்நிகழ்வு 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள Mutur JMI நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டான மாவட்டம் தழுவிய கண்காட்சிக்கான ஒரு பரீட்சாத்த நிகழ்வாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டதாகும் என்று அந்நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜுனைட் முகம்மட் இஹ்ஷான் தனது கருத்தை இவ்விடத்தில் பதிவு செய்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.


