
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கனகர் கிராமம் பகுதியில் உள்ள மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறித்த மக்களின் காணிகளை அவர்களுக்கு கொடுக்குமாறு ஜனாதிபதி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேச மக்கள் தமது காணிகளில் தம்மை மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக எமது செய்தி சேவையின் ‘அரசியலின் மறுபக்கம்’ நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டதுடன் எமது செய்தி சேவையால் அவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனிடம் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோஸ் அமைப்பின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபாகரன் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேச செயலாளரிடம் குறித்த மக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
செய்தியின் பின்னணி
பொத்துவில் பிரதேச செயலக்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இந்த கனகர் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. இங்கு அவர்கள் சேனைப்பயிர் செய்கை கால்நடைவளர்ப்பு போன்ற வாழ்வாதாரங்களை முன்னெடுத்து இருந்தனர்.
இந்நிலையில் 1990 ஆண்டு இலங்கை இராணுவம் மற்றும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கிராம மக்கள் தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.
இதன்பின் வடக்கு கிழக்கில் யுத்தம் நிறைவிற்கு வந்த பின் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
எனினும் இந்த கனகர் கிராம மக்கள் மாத்திரம் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பொத்துவில் பிரதேச செயலாளரும் இணைந்து கனகர் பகுதியில் உள்ள காணிகளை வனப்பரிபாலன திணைக்களத்திற்கு வழங்கியுள்ளனர்.
அதற்கு காரணம் குறித்த கனகர் கிராம பகுதியானது கடற்கரையை அண்டிய சுற்றுலாப்பகுதியாக காணப்படுகின்றது.
அதன்பின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் வீதம் இந்த காணிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டது அரசாங்கத்தினால். அத்துடன் அவர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பணிக்கப்பட்டது.
எனினும் தற்போது குறித்த பிரதேச செயலாளர் கடற்கரையை அண்டிய பகுதியில் காணிகளை அளந்து வனவள திணைக்களத்திற்கு வழங்கி விட்டு ஒரு குடும்பத்திற்கு 1 ஏக்கரும் 4 பரப்பும் காணி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இம்மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
