
மட்டக்களப்பில் மரம் வெட்ட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிச்சையடிமும்மாரி பிரதேசத்தில் மரம் வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றை பயிர்ச்செய்கைக்காக தயார்படுத்துவதற்காக அங்குள்ள மரத்தின் கிளைகளை இரு சகோதரர்கள் வெட்டிக்கொண்டிருந்தனர். இதன்போது ஒருவர் மரத்தில் ஏறி கிளைகளை இலத்திரனியல் வாளினால் வெட்டிக்கொண்டிருக்கும் போது வெட்டிய கிளை உடைந்து மற்றைய சகோதரரின் தலைப்பகுதியில் விழுந்ததில் அவர் மரக்கிளைகளுக்குள் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்ந விபத்தில் 40ம் கிராமம் திக்கோடை பிரதேசத்தை சேர்ந்த தர்மலிங்கம்-லக்ஸன் (28 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைககு உட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

