ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்ய பணிப்புரை

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை நிறைவுசெய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இநத சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முன்னதாக அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது  சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதன்போது,  இந்த சம்பவம் தொடர்பில் பெரிஸ் விசேட விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான கோப்புகளை ஆராய்ந்த சட்டமா அதிபர்  குறித்த பணிப்புரையை விடுத்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீpதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும்,  இந்த மனு மீதான விசாரணை தொடருமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக, நீதியரசர் ஜனக் டி சில்வா அங்கம் வகிக்காத நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அதனை எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.