இரவு உணவு உண்ணவே சூதாட்ட விடுதிக்கு சென்றோம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவரும் நிலையில்  பாகிஸ்தான் கிரிக்கெட் குழாமின் அதிகாரிகள் இருவர் கொழும்பில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் கொடுத்த விளக்கம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் மேலும் கோபத்தை உருவாக்கியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் உமர் பாரூக் கல்சன் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் சர்வதேச கிரிக்கெட் பிரிவு பொது மேலாளர் அட்னன் அலி ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

ஐ.சி.சி. விதிப்படி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியை சார்ந்த அதிகாரிகள் யாரும் சூதாட்டம் சார்ந்த இடங்களுக்கு செல்லக்கூடாது என்ற சட்டம் இருக்கும் நிலையில் அதை மீறி அவர்கள் இருவரும் சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியான நிலையில்  அந்த அதிகாரிகள்  தாங்கள் இரவு உணவு உண்ணவே அந்த சூதாட்ட விடுதிக்கு சென்றதாக விளக்கமளித்துள்ளனர்.

கிரிக்கெட் விமாசகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்களை உடனடியாக பாகிஸ்தான் அழைத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை 2015ஆம் ஆண்டில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அப்போதைய அணி மேலாளருமான மொய்ன் கான் சூதாட்ட விடுதிக்கு மனைவியுடன் சென்று சர்ச்சையை உருவாக்கினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவரை பாதி தொடரிலேயே நாட்டிற்கு திருப்பியழைத்து அழைத்து பணி நீக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது