
உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் பலி
-யாழ் நிருபர்-
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று பயணித்துள்ளது.
இதன்போது தீடீர் என கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதனால் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும் முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ச.சதுசன் (வயது 14) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
