யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை
-யாழ் நிருபர்-
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், பல இலட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இதன்போது, குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்
சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி, இரு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில், வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து பிறந்து நான்கு மாதமேயான குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து, வங்கி புத்தகங்கள், 3 பெறுமதியான தொலைபேசிகள், 11 பவுண் நகை, இரண்டு லட்சம் ரூபாய் காசு என்பவற்றை கொள்ளையடித்து.
பின்னர், பொலிஸாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என வீட்டிலிருந்தவர்களை எச்சரித்து விட்டு, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இது மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
