மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிதியத்தால் உதவி

அனுராதபுரம் -மிகிந்தலை தம்மன்னாவ பிரதேசத்தில் கடந்த 11.08.2023 ஆந் திகதி  மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே மூன்று குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அப்பிரதேச வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தவர்களாவர்.

8, 12 வயதுடைய ஆண், 14 வயதுடைய பெண் பிள்ளையின் தந்தை தர்மசிரி ரணதுங்க (வயது 43), 22 வயதுடைய பெண் பிள்ளை, 14, 07 வயதுடைய ஆண் பிள்ளைகளின் தந்தை எஸ்.மஹிந்த குமார (வயது 45), 14 வயதுடைய ஆண், 18, 10 வயதுடைய பெண் பிள்ளைகளின் தந்தையான சரத் சந்திரசிரி தினநாயக்க (வயது 46) ஆகிய மூன்று குடும்பஸ்தர்களே இவ்வாறு பரிதாபமான முறையில் உயிரிழந்தவர்களாவர்.

இந்நிலையில், உயிரிழந்த மூவரினதும் குடும்பங்களின் உடனடித்தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தியாகி அறக்கொடை நிதியத்தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் உதவி செய்துள்ளார்.

அதற்கமைய தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் மூலம் குறித்த குடும்பங்களின் நிலைமைகளை அறிந்து கொண்டதுடன், அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்று அக்குடும்பங்களின் தூக்கத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு தியாகி ஐயா விடுத்த பணிபுரைக்கமையவும் அங்கு விஜயம் மேற்கொண்டதுடன், நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்குவதற்கு மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

 

இதன் போது,  இக்குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் உதவித்தொகை கையளிக்கப்பட்டது.