பேஸ்புக் காதலனை தேடி இந்தியா சென்ற இலங்கை பெண்

இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதி தனது பேஸ்புக் காதலனுடன் வாழ்வதற்காக இந்தியாவின்ஆந்திர பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

இலங்கையில் பலாங்கொடை, பத்தனாவத்த, இலுக்கும்புர, ஒபநாயக்கபுர என்ற முகவரியை சேர்ந்த சிவகுமாரி விக்னேஷ்வரி (வயது – 25) என்பவரே இவ்வாறு இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வி கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த அரிமகுலப்பள்ளியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான சேர்ந்த லட்சுமணன் (வயது – 28) 2017 ஆம் ஆண்டிலிருந்து 6 ஆண்டுகாலம் பேஸ்புக் நண்பராக இருந்ததுடன் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பெண் லட்சுமணனை திருமணம் செய்து கொள்ள சுற்றுலா விசாவில் ஜூலை 8ஆம் திகதி  இந்தியா சென்றுள்ளார்.

 

மேலும், லட்சுமணனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் ஜூலை 20ம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பில் சமுக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவரது சுற்றுளா விசா காலாவதியாக போவது தொடர்பில்  சித்தூர் மாவட்ட பொலிஸார் தம்பதியை தங்கள் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர். விக்னேஷ்வரியின் விசா ஓகஸ்ட் 15ஆம் திகதியுடன் முடிவடைவதால் சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஒய் ரிஷாந்த் ரெட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதன்படி அவர் இலங்கை திரும்ப வேண்டும் அல்லது சுற்றுளா விசாவை நீடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விக்னேஷ்வரி தனது நாட்டிற்குத் திரும்ப மறுத்து, அவர் தனது கணவருடன் நிரந்தரமாக தங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ்வரி இந்தியக் குடியுரிமையைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும், நடைமுறை மற்றும் அளவுகோல்களும் அவருக்கு விளக்கப்பட்டதாகவும் எஸ்பி ஊடகங்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமையன்று இந்தியாவில் தங்குவதற்கான விசாவை ஒரு வருடம் நீட்டிக்க விண்ணப்பித்தார். “இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் அவருக்கு நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று எஸ்பி மேலும் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, திருமணத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தம்பதியினருக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.