பிறந்து 26 நாட்கள்: குழந்தையின் கழுத்தை பிளேட்டால் அறுத்த தந்தை

இந்தியாவின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தை தனக்கு பிறந்தது அல்ல என தெரிவித்து தந்தையே குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டை அருகே உள்ள கிராமம் தேவிசெட்டிகுப்பம் பகுதியில் இந்திய விமானப்படை தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் பிரிவில் பணியாற்றும் மணிகண்டனுக்கும் (வயது – 30) அணைக்கட்டை அடுத்த ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரது மகள் ஹேமலதா (வயது – 22) என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி திருமணமானது.

ஹேமலதா திருமணம் ஆன சில மாதங்களிலேயே கர்ப்பம் ஆனார். இதற்கிடையே அவரது கணவர் மணிகண்டன் பணிக்கு சென்று விட்டார். இதனால் ஹேமலதா திருமணம் ஆன 3 ஆவது மாதமே தலை பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில ஹேமலதாவிற்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இது குறித்து ஹேமலதா தனது கணவனிடம் கூறி மகிழ்ந்தார். இந்த நிலையில் மணிகண்டன் கடந்த திங்கட்கிழமை  இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு மனைவி மற்றும் குழந்தையை பார்த்த மணிகண்டன் குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை எனக்கூறி மனைவியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்தஇ பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.