மலத்தை உண்ண கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர்கள்

நர்வார் பகுதியின் வார்காடி என்ற இடத்தில் ஜூன் 30 ஆம் திகதி பாலியல் வன்புணர்வு புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டு இரண்டு பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு கட்டாயப்படுத்தி மலம் உண்ண கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை வலுகட்டாயமாக அவமானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து நகரம் முழுவதும் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

போபாலை அடுத்த சிவபுரியைச் சேர்ந்த இளைஞர்களான ஜாடவ் என்ற பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் மற்றொருவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் கேவாட் சமூகத்தைச் சேர்ந்தவருமே இவ்வாறு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞரின் சகோதரர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். முறைப்பாட்டின் பேரில் ஷிவ்புரி மாவட்ட பொலிஸார், உள்ளூர் வாசிகள் ஆறு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது.

இவர்களிடம் விசாரணை செய்ததில், இளைஞர்கள் மீது சுமத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையானது ஆதாரமற்றது எனவும், சொத்து தொடர்பாக எழுந்த பிரச்சனையில் இவ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “இந்த இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட கொடுமையானது, மனித குலத்தை அவமானப்படுத்தும் செயலாகும்” என்றும் “இனியும் இதுபோன்ற செயல்களை செய்ய அனுமதிக்கக்கூடாது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்தவும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட அவர்களின் கட்டடங்களை இடித்துத் தள்ளவும் உத்தரவிட்டுள்ளது” என்றார்.