திருமண நாளில் மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்!

இந்தியாவின் கேரளாவில் திருமணம் செய்துவைக்க மறுத்தால் முன்னாள் காதலியின் தந்தையை திருமண நாளன்று காதலன் அடித்துக்கொன்றுள்ளான்.

திருவனந்தபுரம், மாவட்டம் கலம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது – 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் மகளான ஸ்ரீலெட்சுமியும் (எம்.எஸ்.சி பட்டதாரி) அதே பகுதியை சேர்ந்த ஜிஸ்னு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஜிஸ்னு பள்ளிப்படிப்பு வரை மட்டுமே முடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்ரீலெட்சுமியை தனக்கு திருமணம் செய்து தரும்படி ஜிஸ்னு ராஜூ வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார். எனினும், ஜிஸ்னு மதுப்பழக்கம் கொண்டவர் என்பதாலும் அவர் மீது குற்றப்பிண்ணனி உள்ளதாலும் 3 முறை ஜிஸ்னு பெண்கேட்டு சென்றபோதும் திருமணம் செய்துவைக்க ராஜூ மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, தன் மகள் ஸ்ரீலெட்சுமிக்கு வெறொரு நபருடன் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சிவகிரியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் நேற்று புதன் கிழமை இரவு நடைபெற்ற நிலையில் இரவு 11 மணியளவில் ஜிஸ்னு தனது சகோதரன் ஜிஜின் மற்றும் அவரது நண்பர்கள் மேலும்  இரண்டு பேருடன் ராஜூ வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு ராஜூவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 4 பேரும் சேர்ந்து ராஜூவை சரமாரியாக தாக்கினர். தடுக்க முயன்ற ஸ்ரீலெட்சுமி மற்றும் அவரது தாயார் ஜெயா, திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள் மீதும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மண்வெட்டியால் ராஜூவை ஜிஸ்னு சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த ராஜூவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ராஜூவை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த பொலிஸார் தலைமறைவான ஜிஸ்னு உள்ளிட்ட 4 பேரையும் தீவிரமாக தேடி வந்த நிலையில் உள்ளூர் மக்களே சந்தேக நபர்கள் 4 பேரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.