மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி : சம்பவத்தின் பிண்ணனி என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

அவரை இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக  மாணவியின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும்  யுவதி ஒருவரும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6 ஆம் திகதி மாலை 6.30 அளவில் அப்பகுதியில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர்  அந்த விடுதியில் இரண்டு அறைகளை பதிவு செய்தனர். இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்துவதை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளதாக சாட்சியமளித்துள்ளார்.

பின்னர்  ஒரு யுவதியும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறினர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு  மற்றைய இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த ஒருவர்  விடுதியை ஒட்டியுள்ள ரணில் பாதையில் சிறுமி ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாரென தெரியவந்தது.

குறித்த சிறுமி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்ததால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

திடீரென விடுதியை அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞர், அவசரம் எனக் கூறி முன்னதாக விடுதியிலிருந்து வெளியேறிய இளைஞனையும் யுவதியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த பின்னர் பிரதான சந்தேகநபர் காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர்  தண்டவாளத்தில் கிடந்த யுவதியின் சடலத்தை மற்றைய இளைஞனும், யுவதியும் அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு இரவு 9.30 அளவில் பொலிஸ் சரணடைந்துள்ளனர்.

இதேவேளை  சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற காரின் சாரதியும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர்  சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர், ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தமது மகள் எவருடனும் காதல் வயப்பட்டிருக்கவில்லை என தான் உறுதியாக நம்புவதாக  உயிரிழந்த சிறுமியின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எனது பிள்ளைக்கு அவ்வாறான தேவை இல்லை என சிறுமியின் தாயார் டபிள்யூ.ஏ.நெலுகா கூறியுள்ளார்.

இந்த மரணம் குறித்த சிஹாராவின் தாயார் நெலுகா மேலும் தெரிவிக்கையில்,

என் மகள் கல்வியில் சிறந்தவர். ஒவ்வொரு பாடத்திலும் அதிக புள்ளிகளை பெறுவார். சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது விசேட சித்திகளை பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

என் மகள் காதல் தொடர்பில் உள்ளார் என்ற சந்தேகம் கொஞ்சம் கூட எழவில்லை. அவர் அப்படிப்பட்டவரும் அல்ல என்று நான் நம்புகிறேன்.

இதுவரை அறிமுகம் இல்லாத ஒரு பாவியால் எனது மகளின் உயிர் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளால்  எமது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சம்பவத்தன்று மதியம் வீட்டின் அருகே உள்ள விகாரைக்கு எனது மகள் சென்றார். அவள் வீட்டிற்கு அணியும் ஆடையையே அணிந்திருந்தாள். அந்த பெண்ணே என் மகளை ஒரு கோவிலுக்கு சாப்பிட அழைத்துச் சென்றார். எனக்கு அது பிடிக்கவில்லை.

அப்போது 19 வயதான அந்த பெண்  இன்றைக்கு மட்டும் என் மகளை அழைத்துச் செல்வதாகவும்  இனி வரமாட்டேன் என்றார்.

தன் காதலனை சந்திக்க விகாரைக்கு செல்வதாக கூறி  எனது மகளை துணையான அழைத்துச் சென்று அந்தப் பாவிக்கு பலிகொடுத்துள்ளார்.

எனது மகளுக்கு 16 வயது. அவளுக்கு 29 வயது ஆணுடன் விடுதிக்கு செல்ல எந்த தேவையும் இல்லை. அவள் மது அருந்தியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், எனது மகளுக்கு அவ்வாறான பழக்கம் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறேன்.

என் மகளுக்கு 16 வயது என்பதால் அவளால் விடுதிக்குள் நுழைய முடியவில்லை. எனவே  அப்பகுதியில் உள்ள மற்றொரு யுவதியின் அடையாள அட்டை கேட்டு எனது மகளை அவர்கள் விடுதிக்கு அழைத்துச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளனர்.

இப்போது நாம் இழப்பதற்கு எதுவும் இல்லை. எங்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு நீதி வழங்குமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம். எனது மகளுக்கு நேர்ந்த குற்றம் இந்த நாட்டில் இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்று இறுதியாக வேண்டுகோள் விடுக்கிறேன், என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்