மட்டு.பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
-மட்டக்களப்பு நிருபர்-
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாற்றில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உதயபுரம் பெரியகல்லாறு-02 ஐச் சேர்ந்த ஆனந்தன் டென்சிகா (வயது- 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளவராவார்.
குறித்த மாணவி கிழக்கு பல்கழைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த இரு வாரங்களாக விடுமுறையில் தனது வீட்டில் இருந்து வருவதாகவும், சம்பவ தினத்தன்று கடை ஒன்றுக்கு சென்று தனது தாயாருடன் பழங்கள் வாங்கி வந்து உண்ட பின்னர் தனது படுக்கை அறையில் நித்திரை செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மயக்கமுற்று இருந்ததனை அவதானித்த குடும்பத்தினர் கல்லாறு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேதத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.
பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாமையினால் உடற் கூறுகள் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்