செலவுகளைக் குறைத்து உறுதியான மாற்றத்தைக் காட்டுங்கள் – கிழக்கு ஆளுநர்

 

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் புத்தாண்டுப் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் இடம் பெற்றது.

அங்கு அனைத்து ஊழியர்களின் முன்னிலையில் உரையாற்றிய ஆளுநர்,

நாட்டில் நிலவும் பொருளாதாரச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு நேரடிப் பங்களிப்பை வழங்கும் வகையில் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செலவுகளை கட்டுப்படுத்துவதில் அனைவரும் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

‘மாகாணத்தில் பிரச்சினைகள் எழுந்தபோது நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவற்றை எதிர்கொண்டோம். எனவே மாகாணம் என்ற ரீதியில் அந்த பிரச்சினைகளை சமாளித்தோம். நாட்டிலுள்ள ஏனைய மாகாணங்களை விட எமது மாகாணத்தின் அதிகாரிகள் எப்பொழுதும் சகல பொறுப்புக்களையும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்டோம். மாகாணம் அந்த வெற்றியைப் பெற்றது.

அது மாத்திரமன்றி எமது மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு தூதுவர்கள் கூட எமது மாகாணத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுகின்றனர். அவர்கள் அந்த தகவல்களை தங்கள் சொந்த நாடுகளுக்கும் பகிர்ந்து கொள்கிறார்கள், என்று ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

இதில் ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் சலுகா தினேந்திர, ஊடக செயலாளர் ருசிர திலான் மதுசங்க, ஒருங்கிணைப்பு செயலாளர்கள் மகேஷ் சதுரங்க, சிந்தக விஜேவர்தன, மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாசிகா விஜேசேகர, ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.ஜி.தேவேந்திரன், கணக்காளர் பி.கோணேஷ், நிர்வாக அதிகாரி திரு. சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்