பிரபல தாதா அத்திக் அகமது பத்திரிகையாளர் வேடத்தில் வந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொலை

இந்தியா உத்தர பிரதேசத்தில், மாபியா கும்பல் தலைவனும், பிரபல அரசியல்வாதியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அத்திக் அகமது. சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பு வகித்துள்ள இவர், 5 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ளார். பிரபல ரவுடியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்த அத்திக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில்தான், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இருவரும் நேற்று சனிக்கிழமை இரவு பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும் நிலையில் அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்கள் அத்திக் அகமதுவிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது , கூட்டத்தில் நின்றிருந்த நபர்கள், அத்திக் அகமதுவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, அத்திக் அகமதுவை சுட்டுக்கொன்ற 3 பேரும், அங்கிருந்த காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளனர்.

குற்றவாளிகள் மூவரும் பத்திரிகையாளர்களைப் போல் கூட்டத்தில் நுழைந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக இதற்கென பத்திரிகையாளர்கள் பயன்படுத்தும் மைக், கேமராக்களுடன் நுழைந்து, அத்திக் அகமதுவை நெருங்கி, மிக அருகில் இருந்து, துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்துள்ளது.

உமேஷ் பால் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
தனது மகனின் இறுதிச்சடங்கு நடந்த அன்றே அத்திக் அகமதுவும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.