Last updated on April 28th, 2023 at 03:24 pm

ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அஞ்சலிடப்பட்டுள்ளன

ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அஞ்சலிடப்பட்டுள்ளன

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு தொகை ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அஞ்சலிடப்பட்டுள்ளன என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

மேலும் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்களும் சில மாதங்களில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது எவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர் இடமாற்றத்தில் தன்னிச்சையான எந்த செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. இடமாற்றங்கள் தீர்மானித்தபடியே வழங்கப்படுகின்றன.

2020, 2021, 2022 ஆகிய மூன்று வருடங்களிலும் நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை. அதனால் கடந்த வருடம் 14,500 விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ளன.

அதற்கான இடமாற்ற சபையொன்று நடைமுறையில் உள்ளது. அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரும் அந்த சபையில் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் இரண்டு விதமாக ஆசிரிய இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று சாதாரணமாக கோரப்படும் இடமாற்றம். நீண்ட காலமாக கஷ்டப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுபவர்களும் இதில் உள்ளடங்குவர்.

மற்றையது 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அடிப்படையாகக் கொண்டது.

அந்த வகையில் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை அடிப்படையாக வைத்தே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2017 ஆம் ஆண்டில் இருந்தே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் கடந்த மூன்று வருடங்களில் கொரோனா சூழ்நிலை காரணமாக இது இடம்பெறாததால் அனைத்தையும் ஒன்றாக தற்போது எடுத்துள்ளோம். அந்த வகையில் மொத்தமாக 8893 இடமாற்றங்களுக்கான அனுமதி இடமாற்ற சபை மூலம் கிடைத்துள்ளது.

இதில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் 681 பேர் அடங்குகின்றனர். அதில் 388 பேருக்கான இடமாற்ற கடிதங்கள் தபாலில் இடப்பட்டுள்ளன. மீதமானவை உடனடியாகவே தபாலில் இடப்படும்.

சுமார் ஆயிரம் ஆசிரியர்கள் பத்து வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் சேவையாற்றி கட்டாய இடமாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள்.

எனினும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களும் இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களும் எதிர்வரும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இடம் பெறவுள்ளதால் மாணவர்களின் நன்மை கருதி அந்த இடமாற்றத்தை அதன் பிறகு மேற்கொள்ள மேல் முறையீடு மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதனால் அது தொடர்பான விடயம் ஆலோசனை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்திற்கு பின்னர் இடமாற்றம் வழங்கவும் ஏனைய ஆசிரியர்களுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க பாடசாலை விடுமுறை முடிவடைந்ததும் ஏப்ரல் மாதத்தில் இணைவதற்கான கடிதம் அனுப்பப்படும். எவ்வாறாயினும் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணப்பட்டு விட்டது’ என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதிலளித்தார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172