
-யாழ் நிருபர்-
ஒரு மாத காலத்திற்குள் 60 இலட்சம் ரூபா வலை உடமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலை தந்து கொலை செய்யுங்கள் என்றும் யாழ்ப்பாணம் – காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
எங்களது கடற்றொழில் அமைச்சர் சரி எங்களது அரசாங்கம் சரி எமது பிரச்சினைகளில் கரிசினை கொள்கிறார்கள் இல்லை. இப்போது மீன்பிடி பருவகாலம். இவ்வாறான சூழ்நிலையில் எமது மீனவர்கள் தொழில் செய்து உழைக்கும் நேரத்தில் அவர்களது பல இலட்சம் ரூபா பெறுமதியான முதல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏனைய தொழிலாளிகள் கடலுக்கு சென்று தொழில் செய்வதற்கு பயப்படுகின்றனர். இது குறித்து கடற்படையினருக்கு தெரிவித்தவேளை தமக்கு கைது செய்வதற்கு அனுமதி இல்லை என கூறுகிறன்றனர்.
இதற்கு முன்னர் படகுகள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவ்வாறு நடப்பதில்லை, எமது கரையில் இருந்து 5 கிலோமீட்டர் எல்லைக்குள் வந்து தொழில் செய்து எமது வளங்களை அழிக்கின்றனர்.
இந்திய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவே எமது மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடிப்பதற்கு வருவதில்லை. நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு அவர்கள் அங்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
உங்களது நிவாரணங்கள் எவையும் எமக்கு தேவையில்லை. எங்களை நிம்மதியாக தொழில் செய்வதற்கு விட்டால் நாங்கள் எங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வோம்.
கடந்த ஒரு வாரமாகத்தான் எங்களுடைய கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு மீனவர்களின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. அண்மையில் இந்தியாவில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இலங்கைக்கு வந்துவிட்டு சென்றுள்ளனர்.
அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி எமது கடலுக்குள் உள்நுழைந்து அழிவுகளை ஏற்படுத்தப்போவதாக எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
இலங்கை அரசின் அனுமதியோடு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக உள்ளூர் மற்றும் இந்திய ஊடகங்கள் மூலமாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.
இப்படியான ஏற்பாடுகள் ஏதாவது நடைபெற்றால் எமக்கு உங்களது நிவாரணம் வேண்டாம். எமக்கும் எங்களது மீனவர்கள் அனைவருக்கும் நஞ்சை தந்து கொலை செய்துவிட்டு அவர்களை முழுமையாக இங்கு தொழில் செய்து வளங்களை அழிப்பதற்கு நீங்கள் அனுமதியை வழங்குங்கள் , என்றனர்.
