7ஆம் திருவிழாவை பொது மக்களிடம் வழங்குமாறு கோரி போராட்டம்!

-யாழ் நிருபர்-

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் 7ஆம் திருவிழாவை சுதுமலை தெற்கு பகுதி மக்களிடம் வழங்குமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யுகசக்தி சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பித்த குறித்த போராட்டம் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் வரை பேரணியாக சென்றது.

அதன் பின்னர் ஆலயத்தின் தலைவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஏழாம் திருவிழாவை எம் மக்களுக்கு கொடு, இது தனி குடும்பத்தின் திருவிழா அல்ல ஊர் மக்களின் திருவிழா,  திருவிழாவை பறித்து எம் மக்களை ஏமாற்றாதே, ஆலய நிர்வாகமே நீதியான பதில் சொல், கிராமம் ஒன்றுபட எமது திருவிழா எமக்கு வேணும்’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பண்டையகாலம் தொட்டு ஏழாம் திருவிழாவானது சுதுமலை தெற்கு பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்கான நிதியை எமது பகுதி மக்கள் திரட்டி, எமது திருவிழா தலைவரான கந்தையா என்பவரிடம் கொடுப்போம். அவர் அந்த நிதியை ஆலய திருவிழாவிற்கு செலவு செய்வார். திருவிழாவை அனைவரும் சேர்ந்து செய்வோம்.

அவர் கடந்த 1994ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் அவரது பெண் பிள்ளைகள் வழியில் வந்தவர்கள் எங்களை திருவிழா செய்ய விடாமல், இது தங்களது திருவிழா என்று கூறுகின்றார்கள்.

இந்த பிரச்சினை பொலிஸ் நிலையம், மானிப்பாய் பிரதேச சபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் இந்த பிரச்சினையை விசாரித்துவிட்டு,  திருவிழாவை பொதுவாக நடாத்துமாறு  கூறினர். ஆலய நிர்வாகத்தினரும், திருவிழாவை அனைவரும் சேர்ந்து செய்யுமாறு தான் கூறுகின்றனர்.

இந்த பிரச்சினையை 1994ஆம் ஆண்டு தமிழீழ நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றவேளை, திருவிழாவினை பெதுவாக நடாத்துமாறு அவர்களும் தீர்ப்பளித்தனர்.

கடந்த 23ஆம் திகதி, யுகசக்தி சனசமூக நிலையத்தின் தலைவர் உட்பட ஐவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த தரப்பினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே எமது இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைத்து, நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த திருவிழாவினை நடாத்த வேண்டும் , என தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்