37இ510 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் சிறுகோள்: நாசா எச்சரிக்கை

நமது சூரிய குடும்பத்தில் பூமியைத் தாண்டி பல்வேறு கிரகங்களும், சிறுகோள்களும் சுற்றி வருகின்றன. நமது சூரிய குடும்பத்தை தாண்டி பால்வெளிக்குச் சென்றால் எண்ணிலடங்கா சூரிய குடும்பங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஒரு விமானத்தின் அளவுடன் 110 அடி விட்டமுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.

2024 OJ2 என்று பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 37,510 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இது, பூமியை சுமார் 71,60,000 கி.மீ. தூரத்தில் நெருங்குவதாக கூறியுள்ள நாசா, இதன் அளவு மற்றும் தூரத்தை கருத்தில் கொண்டு இது ஆபத்தானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் திகதி இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து சென்ற பிறகு, மூன்றாவதாக இந்த சிறுகோள் வருவதாக நாசா கூறியுள்ளது.

நாசாவின் ஜெட் பிராபல்ஷன் ஆய்வகத்தின்படி, 2024 OE மற்றும் 2024 OO என அழைக்கப்படும் இரண்டு சிறுகோள்களும் எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக கடந்து சென்று விட்டன என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வுகள் சிறுகோள்கள் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கியிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

செரிஸ், வெஸ்டா, பல்லாஸ் ஆகிய சிறுகோள்கள் நமது சூரிய மண்டலத்தில் இருப்பவை. இவற்றின் அளவு மற்றும் சுற்றுவட்டப் பாதை ஆகியவற்றை நாசா மற்றும் பிற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து, பூமிக்கு ஏற்படக் கூடிய அபாயத்தை மதிப்பிட்டு வருகின்றன. அதன்படி, தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நாசா தற்போது பூமியை நெருங்கி வரும் சிறுகோளை கண்காணித்து வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்