34 ஜனாதிபதி வேட்பாளர்கள் பிரசார செலவுகளின் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில் 34 பேர் இதுவரை பிரசார செலவுகள் தொடர்பான அறிக்கையை வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரையில் 4 வேட்பாளர்கள் மாத்திரமே பிரசார செலவு தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ச, இலங்கை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த தேவகே, சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர்களான பிரேமசிறி மானகே மற்றும் கே.ஆனந்த குலரத்ன ஆகியோர் மாத்திரமே தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான அறிக்கையை சமர்பித்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தல் செலவுகள் வரையறை சட்டத்தின் கீழ் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

குறித்த திகதிக்கு முன்னர் அறிக்கையை சமர்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

13 ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கை சமர்பிக்கப்படுமாக இருந்தால் அதனை சட்டவிரோத நடவடிக்கையாக கருதி அவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்