30 வருடங்களின் பின்னர் தமிழர் ஒருவர் தவிசாளராக தெரிவு!

-மூதூர் நிருபர்-

இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட செல்வரத்தினம் பிரகலாதனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் -கடற்கரைச்சேனையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இவ் கௌரவிப்பு நிகழ்வை மூதூர் -கடற்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது அதிதிகள் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பு மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அதேவேளை நிகழ்வின் அதிதியாக கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாஸனும் பொன்னாடை போர்த்தி நினைவுசே சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக 30 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.அந்த வகையில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.பிரகலாதனுக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் செயலாளர்,இலங்கை தமிழரசு கட்சியின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழரசு கட்சியின் மூதூர் கோட்டக் கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திறந்தமை குறிப்பிடத்தக்கது.