வேலைக்கு ஆட்களின்றி எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!
டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கல ஏவுதளத்திற்கு (Starbase) தகுதியான பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருவதாக அதன் உரிமையாளர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திருமணமான பொறியியலாளர்கள் தமது குடும்பத்துடன் இப்பகுதிக்கு குடிபெயர்வதில் பாரிய சிக்கல் நிலவுகிறது.
குறிப்பாக, அவர்களது வாழ்க்கைத் துணைகளுக்கு (மனைவி அல்லது கணவர்) அங்கு வேறு வேலைவாய்ப்புகள் கிடைப்பது மிகவும் கடினமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இதனை எலோன் மஸ்க் “வாழ்க்கைத் துணைப் பிரச்சினை” (Significant other problem) எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு டெக்சாஸில் உள்ள இந்த ‘ஸ்டார்பேஸ்’ தளம் மக்கள் நடமாட்டம் குறைந்த, ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள பிரவுன்ஸ்வில் (Brownsville) நகருக்குச் செல்வதற்கே சுமார் 40 நிமிடங்கள் வரை பயணிக்க வேண்டும். இவ்வாறான ஒரு தனிமையான இடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு பெரிய நிறுவனங்கள் இல்லாததால், பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அங்கு வேலை தேடுவது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலைமையைக் கிண்டலாகக் குறிப்பிட்ட மஸ்க், அந்த இடம் ஒரு “தொழில்நுட்பத் துறவிகளின் மடம்” (Technology monastery) போல இருப்பதாகவும், அங்கு பெரும்பாலும் ஆண்களே அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னர் கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருந்தபோது இவ்வாறான சிக்கல்கள் இருந்ததில்லை. அங்கு ஏனைய நிறுவனங்களும் இருந்தமையால், குடும்பத்தினர் வேலை தேடுவது இலகுவாக இருந்தது. ஆனால், நிறுவனத்தின் தலைமையகத்தை டெக்சாஸிற்கு மாற்றிய பின்னர், திறமையானவர்களை ஈர்ப்பதில் இவ்வாறான நடைமுறைச் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
இதேபோன்ற ஒரு பிரச்சினையை டெக்சாஸில் உள்ள டெஸ்லா நிறுவனமும் சிறிய அளவில் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், வரும் காலங்களில் இப்பகுதி பெரும் வளர்ச்சி அடையும் என மஸ்க் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
