இலங்கை முழுவதும் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் 65 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
பாதுகாப்பான, மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான நகரங்களை உருவாக்கும் நோக்கில் புதிய “லைஃப் சிட்டீஸ்” (Life Cities) நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட புதிய நகர அபிவிருத்தி அணுகுமுறைக்கு அமைவாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கொழும்பில் இந்தத் திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திட்டத்தின் முதல் கட்டத்தில் மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹெலியகொட ஆகிய 10 நகரங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில், நாடு முழுவதும் 26 நகரங்களின் அபிவிருத்திக்காக 65 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்டங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
தேவையான நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளோம். நாளை முதல் பணிகளை ஆரம்பியுங்கள், என உள்ளூராட்சி பிரதிநிதிகளிடம் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்தகட்ட நிதி ஒதுக்கீடுகள் நகர மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் வெளிப்படுத்தும் முன்னேற்றத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நகர அபிவிருத்தி என்பது கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மக்கள் மட்டுமன்றி நகரங்களில் வாழும் விலங்குகளும் பாதுகாப்பாகவும், தங்களுக்கு உரிய இடம் உள்ளது என்ற உணர்வுடனும் வாழக்கூடிய வகையில் நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் நகர்ப்புறப் பகுதிகள் பெரும்பாலும் முறையான திட்டமிடல் இல்லாமல் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் சுமார் 44.5 சதவீதமான மக்கள் இத்தகைய நகர்ப்புற பகுதிகளில் வசிப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
திட்டத்தின் கீழ் நகரங்களைத் தெரிவுசெய்யும்போது வெளிப்படையான மதிப்பீட்டு முறையொன்று பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நகரத்திற்கும் தனித்துவமான அடையாளத்தை கருத்திற்கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
“ஒரு நகரம் என்பது வெறும் கொங்கிறீட் காடு அல்ல” எனக் குறிப்பிட்ட பிரதமர், நகர அபிவிருத்தியில் அங்கு வாழும் மக்கள் மற்றும் விலங்குகள் இருவரினதும் தேவைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதல் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 நகரங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள், அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் திட்ட ஆரம்ப நிகழ்வின்போது கையளிக்கப்பட்டன.
மக்களை மையமாகக் கொண்ட மற்றும் நிலையான அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொரு நகரத்திற்குமான தனித்துவமான திட்டங்களை செயல்படுத்த உள்ளூராட்சி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றவுள்ளன.










