2021ம் ஆண்டின் இலக்கிய வித்தகர் விருதிற்கு மஷூறா தெரிவு
-கல்முனை நிருபர் –
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமா
கவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன்.1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுத ஆரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி ,தினக்குரல், நவமணி, விடிவெள்ளி, தினமுரசு பாமிஸ் உட்பட பல பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.தற்போது பல மின் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார்.sithy mashoora suhurudeen என்ற தனது முகநூல் பக்கத்திலும் தனது படைப்புகளை பதிவேற்றி வருகிறார்.
கவிதை, சிறுகதை ,கட்டுரை, நாடகம் பாடல், வில்லுப்பாடல் ,தாளலயம் பேச்சு, சித்திரம், கைப்பணி ,சஞ்சிகை என பல் துறைகளிலும் தேர்ந்தவராவார்.
மாவடிப்பள்ளி கமு/அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரியும் இவர், மொழித் தேர்ச்சியிலும் படைப்பாக்கத்திறனிலும் மாணவர்களை சிறந்த அடைவைப் பெறச்செய்தவர்.
2017ல் கலாசார அலுவல்கள் திணைக்களம் வழங்கிய “கலைஞர் சுவதம்”விருது உட்பட இலக்கியத்திற்காக பதின்மூன்று விருதுகள் பெற்றிருக்கிறார்.எழுவான்கதிர்கள்(1986), சொல்லாத சேதிகள்(1986) உயிர்வெளி(1999)பெயல் மணக்கும் பொழுது,(சென்னை வெளியீடு 2007)
கண்ணாடி முகங்கள்(2009) ஓடும் நதியைப் பாடும் மலர்கள்(1997) நதியைப்பாடும் நந்தவனங்கள்(2014),1000 கவிஞர் கவிதைகள் (2017), சுருக்குப் பை(2020 இந்தியவெளியீடு) போன்ற பத்து கவிதைத் தொகுதிகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. கடந்த வருடம்(2021)ல் நதிகளின் தேசியகீதம் எனும் இவரது சுயகவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளது. தவிர அறுபத்து மூன்று முஸ்லீம் பெண்களின் கவிதைகளைத் தொகுத்து “சுட்டுவிரல்”எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். இதுவே இலங்கையில் முஸ்லீம் பெண்களின் முதலாவது கவிதைத் தொகுதியுமாகும்.அச்சு,றோணியோ,கையழுத்து என முப்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகளை வெளியிட்டிருக்கிறார்.கையெழுத்தாக ஆரம்பித்து றோணியோ
வில் முடிவுற்ற”நிறைமதி” சஞ்சிகை எண்பது காலப் பகுதிகளில் தேசியமட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆக்கமாகும்.காலாண்டு சஞ்சிகையான “நிறைமதி”இருபத்தி இரண்டு இதழ்களை வெளியிட்டிருந்தது.
இவரால் ஸ்தாபிக்கப்பட்டு இயங்கிவரும் Sri Lanka pen club ஆற்றலுள்ள பெண்களுக்கு களம் அமைக்கும் பணியைச் செய்து வருகிறது.கடந்த வருடம் இவ்வமைப்பின்மூலம் முஸ்லீம் பெண் எழுத்தாளர்களுக்கான தேசிய மகாநாடு ஒன்றினையும் நடாத்தியாருந்தார்.இவ்வமைப்பின் மூலம் “அவரி” என்ற மின் சஞ்சிகையொன்றினையும் வெளியிட்டு வருகிறார். தனது மாணாக்கர்களின் கவிதைகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகள் ரோணியோவில் வெளியிட்டிருக்கிறார்.மாணவர்களை வழிநடத்தி வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை கள் நான்கு தடவைகள் மாகாணமட்டத்தில் வெற்றியீட்டியிருக்கின்றன.
கலாசார அலுவல்கள் அமைச்சின் வெளியீடான வாழ்வோரை வாழ்த்து
வோம்,அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் வரலாறு மற்றும் இலங்கை தமிழிலக்கிய வளர்ச்சி போன்ற நூல்களுட்பட பதினைந்திற்கு மேற்பட்ட களங்களில் இவர் பற்றிய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
பாடலாக்கம்,கவிதை,சிறுகதை, நாடகத்தயாரிப்பு என தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். இவரது பன்னிரெண்டு நாடகங்கள் மாவட்டம் ,மாகாணம்;தேசியமட்டம் என வெற்றிகளையீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில்மூன்று நாடகங்கள்(பள்ளி) வெற்றியீட்டியுள்ளன. தேசிய மட்டத்தில் நாடகத் தயாரிப்பிற்கான விருதும் பெற்றுள்ளார்.
வீரகேசரி ,தினக்குரல், பிறைவானொலி, ஊவா வானொலி வெற்றி வானொலி ,ரூபவாஹினி போன்றவற்றில் இவர் செவ்விகள் காணப்பட்டுகின்றன. பல்வேறு இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்து பணியாற்றி வரும் இவர் அகில இலங்கை சமாதான நீதிவானுமாவார். 2021 ம்ஆண்டின் இலக்கிய வித்தகர் விருதிற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.