
நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகள்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெரும் போக அறுவடை ஆரம்பித்த நிலையில் விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
பெரும் போக அறுவடையின் போது இரண்டு விடயங்களினால் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விதைப்பு காலத்தில் உரிய நேரத்தில் மானிய பசளைக்கான பணம் கிடைக்கவில்லை என்றும் இதனால் உரியவாறு பயிர் வளரவில்லை என்றும் இதனால் விளைச்சல் குறைந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
அதனையடுத்து பயிர் கதிர்விடும் காலங்களில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக விளைச்சல் குன்றியுள்ளதாகவும் வெள்ளம் காரணமாக நெல்மணிகள் அதிகம் வெள்ளத்தில் மூழ்கியதாலும் விளைச்சல் குறைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் பூவரசன் தீவு, சமாவச்சந்தீவு ஆகிய பகுதிகளில் பெரும்போக அறுவடை தற்போது நடைபெற்று வருகின்றன. இவர்கள் கடந்த காலங்களில் கடன் பட்டு நகை அடகு வைத்து வேளாண்மை செய்த போதும் அதற்கான உரிய பலன் கிட்ட வில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 30 வீதமே விளைச்சல் தற்போது அங்கு உள்ளதாகவும் தற்போது வெட்டுக்கூலி அதிகம் உள்ளதாகவும் இதனால் தமக்கு மீள முடியாத சுமை இருக்கின்றன என கூறிய அவர்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
