குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், 15 வயதுக்குட்பட்டவர்களின் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது. ஐரோப்பிய ஆணையம் செப்டம்பர் 17ஆம் திகதி ஈயு கிட்ஸ் ஆக்ட் (EU Kids Act) எனப்படும் முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
இதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். 13 மற்றும் 14 வயதுடையவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மேற்பார்வையில் மட்டுமே வரையறுக்கப்பட்ட “மினி அக்கவுண்ட்ஸ் (Mini Accounts)” மூலம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியும். இத்தகைய கணக்குகளில் தொடர்புகள் மற்றும் பயன்பாட்டு நேரம் கட்டுப்படுத்தப்படும்; தினசரி திரை நேரம் ஒரு மணித்தியாலமாக மட்டுப்படுத்தப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படாது. ஆனால், சமூக ஊடக நிறுவனங்கள் இந்த வயதினருக்காக “பாதுகாப்பான வடிவமைப்பு” (safe design) நடைமுறைகளை கட்டாயமாக்க வேண்டும். மேலும், குழந்தைகளை நீண்ட நேரம் தளங்களில் வைத்திருக்கக்கூடிய முடிவில்லா ஸ்க்ரோலிங், சில தானியங்கி அறிவிப்புகள் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கும் சில வடிவமைப்பு அம்சங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
மேலும், புதிய கணக்குகளைத் திறக்கும்போது பயனர்களின் வயதை சரிபார்க்கும் நடைமுறைகளை சமூக ஊடக மற்றும் வீடியோ பகிர்வு தளங்கள் அமல்படுத்த வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களே தங்களது சேவைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க வேண்டிய வகையில் பொறுப்புச் சுமையை மாற்றவும் ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிவு இன்னும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சட்டமன்ற செயல்முறையை கடக்க வேண்டியுள்ளது.










