15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்-

தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகை தேசிய வருவாய் புலானாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு தப்பி ஓடிய படகு ஓட்டியை தேடி வருகின்றனர்.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

மெரைன் போலீஸார், க்யூ பிரிவு போலீஸார், மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டும், கடத்தப்படும் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி, முள்ளக்காடு கடற்கரையில் இருந்து படகின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், முள்ளக்காடு கடற்கரையில் இன்று சோதனையிட்டனர்

இதன் போது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகில் 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

நிறுத்தப்பட்டிருந்த படகில் ஆட்கள் யாரும் இருக்கவில்லை.

இதன் போது மீட்கப்பட்ட 5 கிலோ 600 கிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

படகின் உரிமையாளர் மற்றும் கடத்தலில் ஈடுபட முயன்றவர்களை தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதே மதிப்பு .15 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.