
13 வட்டாரங்களில் ஐந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்வோம்: நவரட்ணராசா ஹரிகரகுமார்
-மூதூர் நிருபர்-
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் ஒரு போனஸ் ஆசனத்தை மாத்திரம் பெற்ற எமது கட்சி இம்முறை 13 வட்டாரங்களில் ஐந்து உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூதூர் பிரதேச சபை தேர்தலில் முதன்மை வேட்பாளராக மூதூர் – கட்டைபறிச்சான் வட்டாரத்தில் களமிறங்கியுள்ள நவரட்ணராசா ஹரிகரகுமார் தெரிவித்தார்.
மூதூர் -கட்டைபறிச்சான் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை மூதூர் பிரதேச சபையில் 13 வட்டாரங்களில் எமது கட்சி களமிறங்கியுள்ளது.இதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் எமது பிரதேசம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.வடிகான்கள் வீதிகள் சரியாக இல்லை,மின் விளக்குகள் போதுமானதாக இல்லை.இம்முறை தேர்தலில் நாங்கள் வென்றோமாக இருந்தால் இந்தப் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம்.
எமது பிரதேசத்தில் பல குளங்கள் புனரமைக்கப்படவில்லை காணிகள் விடுவிக்கப்படவில்லை.இந்த காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.அதற்காக முயற்சிகளை எடுத்து போராடுவோம்.அத்தோடு பெரிய பிரச்சினை கட்டைபறிச்சான் இரால் பாலமாகும்.இதனை புனரமைப்புச் செய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அழுத்தங்களை கொடுப்போம்.
தமிழ் தேசியத்தை விரும்புகின்ற கட்சிகளை மக்கள் முன்னால் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.