ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை 2 வது இடம்!

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களின் விலைகள் இவ்வாறு உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கை (15%) இரண்டாம் இடத்தில் உள்ளது.

இப்பட்டியலில் முதலிடத்தில் சாம்பியா (31%) உள்ளதுடன், தாய்வான் (12%), பாகிஸ்தான் (11%) மற்றும் இந்தியா (10%) ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், இந்த உணவு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டாலும், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இந்நீரிணை முழுமையாக மூடப்படுவதால் உலகளவில் கோதுமை மாவின் விலை 4.2 சதவீதத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2 சதவீதத்தாலும் உயரக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நேற்று வெள்ளிக்கிழமை ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது.

உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது. இதன் முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

எரிசக்தி விலை உயர்வைத் தொடர்ந்து ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.