வெள்ளநீர் வடிந்தோட முடியாமல் கோப்பாய் பிரதேச சபை அணை : அமைச்சர் விடுத்த உத்தரவு!

-யாழ் நிருபர்-

நல்லூர்  பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வரும்வெள்ளம், கோப்பாய் பிரதேசசபை யின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்கு ஊடாக வடிந்தோட முடியாதவாறு மண் அணை அமைக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியின் கட்டப்பிராய் பகுதியிலேயே, கோப்பாய் பிரதேசசபை எல்லைக்குள் உள்ள பிரதான வெள்ள வாய்க்காலில் மண் அணை அமைக்கப் பட்டு, நல்லூரிலிருந்து வரும் வெள்ளநீர் வடிந்தோடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளநிலையால் பல பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், நல்லூர்ப் பிரதேசசபை எல் லைக்குள் இருந்து கோப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் செல்லும் இயல்பான நீரேற்றம் தடைசெய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார்.

அங்கிருந்து சம்பந்தப்பட்ட பொறுப்பதி காரர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மண் அணையை உடனடியாக அகற்றுமாறு உத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது,

தற்போதைய நிலைமையில் இதுவொரு தேவையற்ற செயற்பாடாகும். நல்லூரில் இருந்து வரும் வெள்ளநீர் கோப்பாய் வாய்க்கால்கள் வழியாக கடலுக்குச் செல்லும். இது அந்தப் பகுதியின் இயற்கை நீரோட்ட அமைப்பாகும்.

ஆனால், இம்முறை கோப்பாய் பிரதேசசபை தவிசாளர் தன்னிச்சையாக மண் அணை அமைத்து நீரோட்டத்தைத் தடுத்திருப்பது, மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தும் பொறுப்பற்றசெயல்.

வெள்ளநீர் தடையடைந்தால் நல்லூர்ப் பகுதிக்குள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து, வீடுகள், கடைகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கும். எனவே, அரசியலுக்காக இவ் வாறான அருவருக்கத்தக்க செயற்பாடு களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டியது, என்றார்.