வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறிய உள்ளூராட்சி நிறுவனங்கள்
கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட நாடளாவிய ரீதியிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி நிறுவனங்கள் வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க முன்வைத்த வாய்மொழிமூல வினாவிற்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
மின்சார கட்டணத்திற்கான பட்டியல்கள் இலங்கை மின்சார சபையினூடாக விநியோகிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த உள்ளூராட்சி நிறுவனங்கள் அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வீதி விளக்குகளுக்கான விசேட மின்சார கட்டணம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணமே அறிவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணத்தை உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் உரிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
