விண்வெளியில் ‘ஸ்பேஸ் கன்ட்ரோல் வெப்பன்ஸ் (Space Control Weapons)’ எனப்படும் விண்வெளி கட்டுப்பாட்டு ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அமெரிக்க விமானப்படை செயலாளர் ட்ராய் மெயின்க், செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த ஆயுதங்கள் எதிரி நாடுகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்க இராணுவப் படைகளைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படக்கூடியவை என மெயின்க் தெரிவித்தார். எனினும், எத்தனை ஆயுதங்கள் விண்வெளியில் உள்ளன, அவை எந்த வகையைச் சேர்ந்தவை, எப்போது விண்ணில் செலுத்தப்பட்டன போன்ற முக்கிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, விண்வெளியில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இடையிலான இராணுவப் போட்டி மேலும் தீவிரமடையக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த நடவடிக்கை விண்வெளியை புதிய ஆயுதப் போட்டிக் களமாக மாற்றக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.










