விசாரணைகள் நிறைவடையும் வரை இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என சில பெற்றோர்கள் கோருகின்ற நிலையில், மீண்டும் பரீட்சை நடத்தப்படக் கூடாது எனப் பரீட்சைக்குத் தோற்றிய பெரும்பாலான சிறுவர்களும் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காகப் புலமைப் பரிசில் பரீட்சையில் பாதிப்பை எதிர்நோக்கிய தரப்பினர் சிலர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததாகப் பெற்றோரும் ஆசிரியர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனையடுத்து பரீட்சை திருத்தப் பணிகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்