-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு-வாழைச்சேனை கிண்ணையடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக்கைது நடவடிக்கையின் போது, 6 பரல் கொண்ட 1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்பு என்பவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண குற்றப்பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற கிழக்கு மாகாண குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், தோனி மூலம் வாவியில் பிரயாணித்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது, அங்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரை கைது செய்ததுடன், கசிப்பும் மற்றும் உற்பத்தி உபகரணங்களை மீட்டு வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.