நாடளாவிய ரீதியில் தபால் நிலைய உத்தியோகத்தர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த தபால் சேவைகள் இன்று திங்கட்கிழமையுடன் வழமைக்கு திரும்பியுள்ளது.
இதன் காரணமாக இன்றைய தினம் ஏராளமான பொது மக்கள் உட்பட அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு வருகை தந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.
எனினும் கடந்த நாட்களில் முன்னெடுத்த அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
தபால் சேவையில் கைவிரல் ரேகை பதிவு ஸ்கேனர் பொருத்தல் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவில் மாற்றமில்லை என்ற அரசாங்கத்தின் உறுதியான இரண்டு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்து தபால் சேவையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது .