
வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்தவர் கைது
-பதுளை நிருபர்-
தோட்ட பகுதிகளில் வளர்ப்பு மாடுகளை களவாடி இறைச்சிக்காக விற்பனை செய்து வந்த நபர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை சங்கபோவ மாவத்தையை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்டப் கிகிரிவத்தை பகுதியில் நேற்று அதிகாலை மாட்டு தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 வயதுடைய மாடொன்றை காணவில்லை என மாட்டு உரிமையாளர்கள் தேடிய போது பசறை மடூல்சீமை வீதி 3ஆம் கட்டை பகுதியில் தோட்ட தொழிலி்ல் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களால் குறித்த பகுதியில் இரத்த கறைகள் காணப்படுவதாகவும் இவ்விடத்தில் மாடு வெட்டப்பட்டிருக்கலாம் எனவும் மாட்டு உரிமையாளருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது அவ்விடத்திற்கு விரைந்த மாட்டு உரிமையாளர் மாட்டின் தலை, மாட்டின் தோல் ஆகியன கிடப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
பின்னர் அவ்விடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி திரிந்த மகேந்திரா லொறியின் மீது சந்தேகம் கொண்ட மாட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதன் போது சந்தேகத்துக்கிடமான குறித்த லொறியை சோதனைக்குட்படுத்திய போது லொறியில் குறித்த மாட்டின் கயிறு மற்றும் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து குறித்த லொறியில் காணப்பட்ட கயிரானது தனது மாட்டின் கயிரென மாட்டின் உரிமையாளர் உறுதிபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரத்னாயக தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
