வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து காந்திப்பூங்கா வரை பேரணியாக சென்று அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புகள், பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவ அமைப்புகள்இ தமிழ் தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, காணாமல் போயுள்ள தங்களது உறவினர்களின் நிலைமை குறித்து தகவல் இன்றி இலங்கை முழுவதிலும் உள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் துன்பமடைந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் போனார் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயுத மோதல்கள் மற்றும் அதற்கு பின்னரான வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனோர் உயிருடன் இருக்கின்றார்களா? அல்லது இறந்து விடடார்களா? என்று தெளிவற்ற நிலையில் வாழும் அவர்களது குடும்பங்களுக்கு அது வேதனையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.

காணாமல் போயுள்ள தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவது மிகவும் அவசியமான தேவையாகும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.