
வறிய குடும்பங்களை இலக்கு வைத்து சிறுநீரக வர்த்தகம் : விசாரணைகள் ஆரம்பம்
கொழும்பு பகுதியில் உள்ள வறிய குடும்பங்களை இலக்கு வைத்து இடம்பெறும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வசிக்கும் நால்வர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தை யார் யாருக்கு கொடுத்தார்கள், அதற்கான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததா? என்ற விடயம் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு முறையான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நீதிமன்றில் மன்றுரைத்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறான சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கும் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த வருடமும், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் குறித்த வைத்தியசாலையில் மீண்டும் அது தொடர்பான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
