வடகொரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் ரியோ சோல்-உங் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகக் குழுவொன்று வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
வடகொரிய அரச ஊடகமான KCNA வெளியிட்ட தகவலின்படி, ரியோ சோல்-உங் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை பியோங்யாங்கில் இருந்து வியட்நாமுக்கு புறப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பயணத்தின் நோக்கம் மற்றும் குழுவின் பயணத் திட்டம் தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வடகொரியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு சமீப காலங்களில் அதிகரித்து வரும் நிலையில் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் வியட்நாம் வெளியுறவு அமைச்சர் லே ஹோய் ட்ருங் வடகொரியாவுக்கு விஜயம் செய்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சோய் சன்-ஹுயை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் பியோங்யாங்கில் சந்தித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், வியட்நாமின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி டோ லாமுக்கு அனுப்பிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.









