அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய பேருந்து விபத்து தொடர்பாக செய்தி சேகரித்துக் கொண்டிருந்த NBC4 செய்தி ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கின் சாட்ஸ்வொர்த் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், அப்பகுதியில் இடம்பெற்றிருந்த SUV வாகனமும் நகரப் பேருந்தும் மோதிய விபத்து தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது. அந்த பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்திருந்தனர். ஹெலிகொப்டர் விபத்து நடந்த இடம் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 1.6 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
NBC4 செய்தி தொகுப்பாளர் கொலீன் வில்லியம்ஸ் நேரடி ஒளிபரப்பின்போது தங்களது Chopper 4 விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்தினார். NBC4 செய்தியாளர் Eliana Moreno மற்றும் விமானி George Marciniw ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக நிலையம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) இணைந்து விசாரணையை முன்னெடுக்கவுள்ளன.









