லிதுவேனியாவின் வான்வெளிக்குள் நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்றை நேட்டோ போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன. செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக லிதுவேனிய அதிபர் கிட்டானஸ் நவுசேடா தெரிவித்துள்ளார்.
இந்த ஆளில்லா விமானம் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவுக்குள் நுழைந்து மேற்கு நோக்கிப் பறந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லிதுவேனியாவின் ஷியாவுலை விமானத் தளத்தில் நிலைகொண்டுள்ள இத்தாலிய விமானப்படை யூரோபைட்டர் டைபூன் (Eurofighter Typhoon) போர் விமானங்கள், நேட்டோவின் பால்டிக் வான்பாதுகாப்பு பணியின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதனை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானத்தின் சிதைவுகளைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை உயிரிழப்பு அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நேட்டோவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.









