செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் எனக் கோரி போலந்தின் தலைநகர் வார்சோவில் விநோதமான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மனிதர்களைப் போன்ற மனிதவடிவ ரோபோ(Humanoid) ரோபோக்கள் மற்றும் நான்கு கால் விலங்குகளைப் போன்ற நாற்கால் விலங்கு(Quadruped) ரோபோக்கள் கொடிகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி, வட்டமாகச் சென்று அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
“வேலைத் தளங்களைப் பாதுகாத்திடுங்கள்”, “சட்டங்களை இயற்றுவதற்கான நேரம் இது”, “தாமதிக்காமல் முறைப்படுத்துங்கள்” உள்ளிட்ட கோஷங்கள் ஒலிபெருக்கிகள் மூலம் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்ற அஜிபாட் ஏ3(Agibot A3) என்ற மனித வடிவிலான ரோபோ, AI மற்றும் ரோபோ தொழில்நுட்பம் எதிர்கால விடயம் மட்டுமல்ல, தற்போது நடைமுறையில் உள்ள யதார்த்தம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏ.எஃப்.பி(AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
AI மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து பொதுமக்களிடையே விவாதத்தை உருவாக்கும் நோக்கில் ‘ஜனநாயகவாதம்(Democratism)’ அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










