ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா 262–159 என்ற வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது ட்ரம்பின் கையொப்பத்துக்காக காத்திருக்கிறது.
‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026(Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act)’ எனப்படும் இந்தச் சட்டம், ரஷ்யாவின் எரிசக்தித் துறைக்கு அழுத்தம் கொடுப்பதுடன், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய ரஷ்ய எண்ணெய் இறக்குமதியாளர்கள் இதன் சாத்தியமான இலக்குகளாக உள்ளனர்.
எனினும், மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாலேயே இந்தியப் பொருட்களுக்கு உடனடியாக 100% வரி விதிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமில்லை. சட்டம் அமலுக்கு வந்த பின்னர், அந்த அதிகாரத்தை ட்ரம்ப் பயன்படுத்துகிறாரா, எந்த நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படுகிறது என்பதே அடுத்த கட்டமாகும்.
இந்திய வெளியுறவு அமைச்சகம், புதிய அமெரிக்க நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளதுடன், நாட்டின் 140 கோடிக்கும் அதிகமான மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிலையான மற்றும் மலிவு விலையில் எரிசக்தியைப் பெறுவது இந்தியாவின் முக்கிய முன்னுரிமை என தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான புதிய அமெரிக்க வரிகள் இரு நாடுகளின் வர்த்தக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என இந்திய தரப்பு எச்சரித்துள்ளது.










