ரயில் விபத்து: இருவர் பலி
இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராதர்பூர் அருகே சரக்கு ரயில் ஒன்று அதிகாலையில் தடம் புரண்டு, இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அப்போது, அவ்வழியாக, மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கி சென்ற விரைவு ரயில், தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில், விரைவு ரயிலின் 18 பெட்டிகள் தடம் புரண்டன. தகவல் அறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், ரயில் பெட்டிகளுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
ரயில் தடம் புரண்டதில், B4 பெட்டியில் பயணித்த 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் சக்ராதர்பூர் மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆம் திகதி, உத்தரப்பிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன் சோகம் மறைவதற்குள், மேலும் ஒரு ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பான அரசின் அலட்சியப்போக்கிற்கு முடிவே இல்லையா என்று மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது தான் ஆட்சி நடத்தும் முறையா என்று மத்திய அரசை வினவியுள்ளார். வாரா வாரம், நிகழும் ரயில் விபத்துகளை எத்தனை காலங்களுக்கு சகித்துக் கொள்ள முடியும் என்றும் மம்தா பானர்ஜி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்