யுத்தத்தின் வலியை காட்டும் புகைப்படத்துக்கு விருது

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது.

லஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் (வயது – 39) என்ற பத்திரிகையாளரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

புகைப்பட பத்திரிகையாளரான இவர் 2003 முதல் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு கடந்த 2010இல் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார்.

மருத்துவமனையின் சவக்கிடங்கில் துணியால் சுற்றப்பட்ட உயிரிழந்த தனது 5 வயது மருமகளின் உடலைப் பார்த்து பெண் ஒருவர் அழுவதை தனது கமரா கண்களின் வழியே படம் பிடித்திருந்தார் முகமது சலேம்.

“காசாவின் நிலை என்ன என்பதை இந்தப் படம் விளக்குகிறது. தங்கள் அன்பானவர்களின் நிலையை குறித்து அறிந்து கொள்ள மக்கள் அங்குமிங்கும் அல்லாடிய நேரம் அது. அப்போது இந்தப் பெண், குழந்தையின் உடலுடன் கலங்கி நின்றார். அதனை நான் கவனித்தேன். அந்த வேதனையை ஒளிப்படத்தின் வழியே உலகுக்கு கடத்த நினைத்தேன்” என இந்தப் படம் எடுத்ததற்கான காரணம் குறித்து சலேம் விளக்கியுள்ளார்.

விருது வென்ற குறித்த புகைப்படம் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் பத்திரிகையில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்