
யாழ். கோப்பாய் சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழா
-யாழ் நிருபர்-
கோப்பாய் சிவம் ஐயாவால் நடத்தப்படும் குருகுலம் காலத்தின் தேவை கருதிய ஒன்று என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆலயங்களின் நிர்வாகங்கள் மற்றும் அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமையை வேதனையுடன் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்காக அவர்கள் அதிகளவு பணத்தை வீணாகச் செலவு செய்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
ஆலயங்கள் சமூகங்களை வழிப்படுத்தவேண்டும் எனவும், அப்படிப்பட்ட ஆலயங்கள் வழக்குகளுக்காக நீதிமன்றங்களை நாடும் நிலைமை ஏற்பட்டது துன்பகரமானது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, பிரம்மசிறி ப.சிவானந்தா சர்மா (கோப்பாய் சிவம் ஐயா) தொடர்ச்சியாக இந்தக் குருகுலத்தை நடத்தவேண்டும். அதன் மூலம் பல அந்தண சிவாச்சாரியர்களை அவர் உருவாக்கவேண்டும் எனவும் ஆளுநர் வேண்டிக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசன், இந்து சமயப் பேரவையின் தலைவர் சக்திகிரீவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்