யாழில் இருந்து தினமும் திருமலைக்கு சுண்ணக்கல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக – திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவது பற்றிய அதிர்ச்சித் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளியிட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் இதனைச் சிறீதரன்  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

காங்கேசனதுறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காகச் சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோண மலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்