-மூதூர் நிருபர்-
அனுராதபுரம் – கெபித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகலஉஷ்கொள்ளாவ பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெப்பித்திகொள்ளாவ, -பகலஉஸ்கொள்ளாவ பகுதியைச் சேர்ந்த செனவி ரத்னகே ஸ்ரீ பால (வயது 70) மற்றும் சமரக்கோன் அப்புஹாமிலாகே சுகத் சுமனரத்ன (வயது 51) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களது வாழ்வாதாரமாக சேனை பயிர் செய்கையில் ஈடுபட்டு வரும் குறித்த இருவரும், சிறிய காட்டினை துப்புரவு செய்து கொண்டிருக்கும்போது அருகே வந்த யானை இரண்டு பேரையும் தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கெப்பித்திகொள்ளாவ திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எல். காதர், இரண்டு சடலங்களையும் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










